Please insert yo

ஹிந்து டெம்பிள் ரிதம்ஸ் - தாண்டவ் 2011

இந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி, மிச்சிகன் மாநிலத்தின் ஓக் பார்க் நகரைச்சேர்ந்த திருமதி சுதா சந்திரசேகர் தாம் தலைமை தாங்கி நடத்தி வரும் ஹிந்து டெம்பிள் ரிதம்ஸ் என்கிற பரதநாட்டிய பள்ளியின் ட்ராய், காண்டன், ஆன் ஆர்பர், கலாக்ஷேத்ரா பிரிவுகளின் 110 மாணவியர் பங்கு பெற்ற தாண்டவ் எனும் மாபெரும் நடன நிகழ்ச்சியை மிச்சிகன் ட்ராய் நகரில் அமைந்த பாரதியா கோவிலில் அருமையாக தொகுத்து வழங்கினார்.

திருமதி சுதா சந்திரசேகர் மும்பையின் பிரபலமான ராஜ ராஜேஷ்வரி பரத நாட்டிய கலா மந்திர் என்னும் நாட்டிய பள்ளியில் பயின்று தேறி கடந்த சுமார் 45 ஆண்டுகளாக கனடாவிலும் அமெரிக்காவிலும் நாட்டியம் பயில்வித்து வருகிறார். இது வரை தனது ஹிந்து டெம்பிள் ரிதம்ஸ் நாட்டிய பள்ளியின் மூலம் 75 அரங்கேற்றங்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார். கிளீவ்லாந்து தியாகராஜா ஆராதனா வழங்கிய ந்ருத்ய சேவா மணி, நாட்டிய வேதா பாரதி மற்றும் ந்ருத்ய ஸ்வர்ண பூஷன் என்ற பட்டங்கள் பல பெற்றுருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சி நடந்த நாளே திருமதி சுதா நாட்டியம் பயின்ற ஸ்ரீ ராஜ ராஜேஷ்வரி பரத நாட்டிய கலா மந்திர் நாட்டிய பள்ளியின் பிதா மகர் குரு பரத வித்வான் குரு திருவிடைமருதூர் திரு குப்பையா பிள்ளை அவர்களின் 125 ஆவது ஆண்டு நிறைவு தினமாகும்.

இந்த நடன நிகழ்ச்சி மகா சிவராத்திரியை முன்னிட்டு அமைக்கப்பட்டதால், சிவ பெருமானின் மேல் இயற்றப்பட்ட அனைத்து பாடல்களுக்கும் ஐந்து வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெண்மணிகள் வரை மிக சிறப்பாக நாட்டியம் ஆடி சபையில் கூடி இருந்தவர்களை வெகுவாக மகிழ்வித்தனர். கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வரும் இந்த தாண்டவ் நாட்டிய நிகழ்ச்சி இம்முறை ஏழு மணி நேரத்தில் 32 நடனங்கள் வழங்கிய குழந்தைகளின் ஆர்வம் குறிப்பிடத்தக்கது. பரத நாட்டிய நிகழ்ச்சியில் பொதுவாக கண்டு ரசிக்கப்படும் புஷ்பாஞ்சலி, அல்லாரிப்பு, கவுத்துவம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா போன்ற உருப்படிகள் பற்பல ராகங்களிலும் பற்பல தாளங்களிலும் இடம் பெற்றன.

சிவபெருமானை போற்றி கூட்டாக ஆடிய சின்ன குழந்தைகளின் பற்பல நடனகள் பெற்றோர்களின் மனதையும் இதர சபையினரின் உள்ளத்தையும் ஈர்த்து பால் மணம் மாறா இந்த சிறு குழந்தைகளா இப்படி திறமையாக ஆடுவது என்று வியக்கும் வகையில் இருந்தன.

நாட்டிய பள்ளியின் மூத்த மாணவியான குமாரி கிருத்திகா ராஜ்குமார் அருமையாக ஆடிய சுவாமி நான் உந்தன் அடிமை என்ற நாட்டகுறிஞ்சி ராகத்தில் அமைந்த வர்ணம், கண்டவர் மனக்கண் முன் சிவபெருமானையும், நந்தனாரையும் நிறுத்தி அடி மனதை நெகுழ்த்தி விட்டது. மற்றொரு வர்ணமான ஆலமர் ஞான தீபமே என்னும் ஸ்ரீராக வர்ணத்தை மும்பையின் ராஜ ராஜேஷ்வரி பரத நாட்டிய கலா மந்திர் நாட்டிய பள்ளியின் தலைமை ஆசிரியர் குரு திரு. கல்யாணசுந்தரம் அவர்களிடம் அண்மையில் நேரடியாக பயின்ற ஆன் ஆர்பர் சகோதரிகள் குமாரி நிகிலா மற்றும் குமாரி ஷாலினி வெகு திறமையாக ஆடி மார்கண்டேயன் யமனை வென்ற கதையை அபாரமாக நாட்டியம் ஆடி விவரித்தனர். இதைத்தவிர பிரபல சிவன்பதங்களான கோபாலக்ருஷ்ண பாரதியின் ஆடும் சிதம்பரமோ ஆடிய சோனாலி ரெட்டி, ராவணனின் சிவ தாண்டவ ஸ்தோத்திரம் ஆடிய குமாரி நிதி ஸ்ரீபாதா, முத்துச்வாமி தீஷிதரின் ஆனந்த நடன பிரகாசம் ஆடிய குமாரி ஸ்னேஹா மரிபுடி, ஹிந்தி பதமான சீஷ கங்க அர்தங்க பார்வதி ஆடிய குமாரி அனன்யா வாசுதேவன், பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதியின் போ சம்போ ஆடிய ஸ்ரீகரி தாடேபள்ளி ஆகியவரின் தனி நாட்டியம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றன.

மற்றும் கூட்டு நடனங்களில் ஆதி சங்கரரின் கணேஷ பஞ்சரத்னம், மாரிமுத்து பிள்ளையின் காலை தூக்கி நின்று ஆடும் தெய்வமே, பாபநாசம் சிவனின் இடது படம் தூக்கி ஆடும், அச்சுத தாசரின் சதானந்த தாண்டவம், லால்குடி ஜெயராமனின் ஸ்ரீகர சுகுணாகர சப்தம், கோபாலக்ருஷ்ண பாரதியின் நடனம் ஆடினார், கமாஸ் ராகத்தில் அமைந்த ஸ்வர ஜதி சம்பசிவா எனவே, சாரங்க ராகத்தில் அமைந்த ஆடினதெப்படியோ, நீலகண்ட சிவனின் ஆனந்த நடமாடுவார் தில்லை அனைத்தும் ஆடிய முன்னிலை மாணவியர் தங்களது நாட்டிய பள்ளிக்கு மிகுந்த பெருமை சேர்த்தனர்.

சிவன் ஒரு பாகமாகவும் அன்னை உமை ஒரு பாகமாகவும் கொண்ட அர்தனாரீஸ்வரரைப்போற்றும் ஸ்தோத்திரத்தில் சிவன் ரூபத்தில் தாண்டவ நடன பாணியில் குமாரி டீனா சம்மதரும் , உமை ரூபத்தில் லாஸ்ய நடன பாணியில் குமாரி ஆர்த்தி சூர்யா இருவரின் மிகப் பிரமாதமான ஒருங்கிணைந்த நடனம் மக்கள் மனதை கவர்ந்த வண்ணத்தை நேரில் பார்த்தல் தான் நன்கு விளங்கும் என்பதில் சபையோரின் கரவொலியிலும் ஆரவாரத்திலும் திண்ணமாக தெரிந்தது.

குமாரி அக்ஷயா ராஜகுமார் மற்றும் குமாரி ஸ்னேஹா மரிபுடி இருவரும் அழகாக ஆடிய லதாங்கி ராகத்தில் அமைந்த அம்பல நடமிடும் பாதன் என்னும் ஜதிதிகள் நிறைந்த பதம் காண்பதற்கும் கேட்பதற்கும் வசந்த கால தென்றல் போல் இதமாக இருந்தது.

இந்த தாண்டவ் நிகழ்ச்சிக்காக ஆண் பாடகர் திரு கோபால் வெங்கட்ராமனால் எழுதி இசையமைத்து பாடப்பட்டு, திருமதி சுதாவினால் கன கச்சிதமாக நாட்டிய வடிவமைக்கப்பட்டு சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த தத் தித் தோம் நம் என்னும் சிவ தாண்டவ பதமும், ஹிந்தோள ராகத்தில் சிவ பெருமானைப்போற்றி அமைக்கப்பட்ட கண்ட நடை தில்லானாவும் ஆடிய ஐவரான குமாரி கிருத்திகா ராஜ்குமார், குமாரி அக்ஷயா ராஜ்குமார், குமாரி ஸ்னேஹா மரிபுடி, குமாரி ஸ்ரீகரி தாடேபள்ளி மற்றும் குமாரி அமிகா நந்தியும் ஆடிய நடனம் புதிய உருப்படியாக இருந்தாலும் மிக உயர்ந்த ரகத்தை சேர்ந்த நடனங்களாக காட்சி அளித்தன.

திருமதி சுதாவின் நட்டுவாங்கமும் வாய்ப்பாட்டும், மகள் குமாரி வித்யா சந்திரசேகரின் நிகழ்ச்சி தொகுப்பும், நட்டுவாங்கமும் பாட்டும், ஆண் பாடகர் திரு கோபால் வெங்கட்ராமனின் வாய்ப்பாட்டும், மிருதங்கத்தில் வெளுத்து வாங்கிய திரு ஜெயாசிங்கமும், வயலினில் குமாரி அக்ஷயா ராஜ்குமாரும், புல்லாங்குழலில் திரு அனிருத் ஸ்ரீதரும் ஆடும் குழந்தைகளுக்கு தக்க துணையாகவும் பக்க பலமாகவும் திகழ்ந்து சபையில் கூடி இருக்கும் சங்கீத ரசிகர்களை பாவ ராக தாளம் கொண்ட இன்பக்கடலில் ஆழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. பதினைந்து வயதே நிரம்பிய குமாரி அக்ஷயா ராஜ்குமாரின் வயலின் மற்றும் திரு அனிருத்தின் புல்லாங்குழல் இசையில் தேர்ச்சியும் ஒரு ஒளிமயமான எதிர்காலமும் தென்பட்டன. ஏழு மணி நேரம் தொடர்ந்து எல்லா பாடல்களுக்கும், நடனங்களுக்கும் வெகு நேர்த்தியாக கரங்கள் அசராமல் மிருதங்கம் வாசித்த திரு ஜெயசிங்கம் அவர்களுக்கு எவ்வளவு கரவொலி எழுப்பி நன்றி செலுத்தினாலும் ஈடாகாது.

110 மாணவியரை ஒரு பெரிய நாட்டிய நிகழ்ச்சிக்காக தயார் படுத்தி அவர்களை ஏழு மணி நேரம் ஊக்கத்தில் ஆழ்த்தி புன்னகை பொலிவுடனும், தெளிவுடனும் நிலை நிறுத்தி நடனங்களின் ஆணி வேறாக திகழ்ந்து, மணியாக பயில்வித்து அன்புடனும் அரவணைப்புடனும் அபாரமான முறையில் சிவ பெருமானுக்கு அர்ப்பணமாக வழங்கிய தலைவி திருமதி சுதா சந்திரசேகருக்கு ஒரு பெரிய சபாஷ்!

மதியம் மூன்று மணியிலிருந்து இரவு பத்து மணி வரை தொடர்ந்த இந்த பிரம்மாண்டமான நாட்டிய நிகழ்ச்சியை ஒரு தொய்வில்லாமல், சலிப்பேர்ப்படுத்தாமல் ஆங்கிலத்தில்மொழிந்து ஒன்றின் பின் ஒன்றாக 32 நடனங்களை தெளிவாகதத்தொகுத்து வழங்கிய குமாரி வித்யா சந்திரசேகரின் சொல் வன்மையும், பல பாடல்கள் பாடி நட்டுவாங்கம் செய்த குரல் மென்மையையும், கலைத்திறமையும் பாராட்டாமல் இருக்க இயலாது.

இம்மாதிரியான அமெரிக்கா வாழ் குழந்தைகளும் மற்றும் இளம் பெண்களின் நுண் கலை ஆர்வமும், இந்திய காலாச்சார ஈடுபாடும் , பெற்றோர்களின் ஊக்குவிப்பும் , சபையோரின் பேராதரவும் , கலை ஆசிரியரின் சீரான பயிற்சியும் இருக்கும் வரை இந்த நுண் கலைகளான பரதமும் சங்கீதமும் என்றென்றும் மேலோங்கி நிற்கும் என்னபதில் ஆச்சரியமென்ன ?